திண்மக் கழிவு முகாமைத்துவம்

                              
      பரிமாணம் அடைந்த மனிதனின் நாளாந்த நடவடிக்கைகளால் வளிக்கோளம், உயிர்க்கோளம் என்பன பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் உயிர்க்கோளமானது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, பரிணாமபெருக்கம் என்பவற்றுடன் சூழல் மாற்றங்களின் பிரதிபலிப்பாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இக்கோளத்தில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கங்களிற் சில இலகுவாக கட்டியெழுப்பப்பட முடியாதுள்ளன. அவ்வாறான பாதிப்புக்களில் திண்மக்கழிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 


திண்மக் கழிவுகளும் அதன் வகைகளும்.


          மனிதன் பல்வேறுபட்ட தேவைகளுக்காக பயன்படுத்திய பொருட்களின் மிகுதியை முழுமையாக பயன்படுத்த முடியாமல் ஒரு பகுதியைக் கழிவாக விட முற்படும் போது அவை திண்மக் கழிவுகளாகின்றன. அதாவது சூழலில் விடப்படும் இயற்கையான செயற்கையான கழிவுகளினால் அகற்றற் பிரச்சினையும் உக்க முடியாத தன்மையும் காணப்படுகின்றது. இக்கழிவுகள் பல்வேறு வகைப்படுகின்றன. சேதனக் கழிவுகள், அசேதனக் கழிவுகள், கைத்தொழிற் கழிவுகள், விவசாயக் கழிவுகள், மீன்பிடிக் கழிவுகள், வர்த்தகக் கழிவுகள், உணவுக் கழிவுகள் போன்றவை அவற்றுள் சில.
நகரங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான நாளாந்தப் பொருட்களை வழங்கக்கூடியகாகவும் அத்துடன் சேரும் நாளாந்தக் கழிவுப்பொருட்களை அகற்றக் கூடியதாகவுமிருக்க வேண்டும். வீடுகளிலிருந்தும் கைத்தொழிற்சாலைகளிலிருந்தும் சேரும் திண்மக் கழிவுகளே அதிகமாக உள்ளன. நகர்ப்புறச் சனத்தொகை அதிகரிப்பு, கைத்தொழிற்துறையின் அதிகரிப்பு, சீரற்ற வடிகாலமைப்பு, இயற்கை அனர்த்தங்கள், நகர விரிவாக்கம், நகர வாழ்க்கைத் தரம் உயர்வடைதல், சேரிக் குடியிருப்புக்களின் உருவாக்கம் போன்றவை திண்மக் கழிவுகள் உருவாதற்கான பொதுவான காரணங்களாகும்.

 


திண்மக் கழிவினால் ஏற்படும் பாதிப்புக்கள்


             சமுதாயத்தினாற் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் பொருட்களில் உயிரியல் ரீதியான கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், கொள்கலன்கள் இறப்பர், உலோகங்கள், கடதாசி, வாகனக்கழிவுகள், கண்ணாடி போன்றவற்றாற் சூழலிற்கு பாதிப்புக்கள் அதிகமாகும். ஏனெனில் இவை இலகுவில் பிரிகையடைய முடியாதனவாகக் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புக்களை நோக்கும் போது அவை உடனடியான பாதிப்புக்களையும் நீண்டகால பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. திண்மக் கழிவுகள் எரியூட்டப்படுவதனால் வளிமண்டலத்தில் வாயுக்கள் அல்லாத சேர்க்கைகளினால் மாசடைதல் ஏற்படுவதுடன் அதை அண்டிய பகுதிகளில் சுவாச நோய்களும் தூசுப்படலங்களும் காணப்படுகின்றன.
திண்மக் கழிவுகள் தேங்கியுள்ள இடங்களில் உள்ள தரைக்கீழ்நீர், மேற்பரப்புநீர் என்பன நிறம், மணம், சுவை என்பனவற்றினால் மாசடைவு ஏற்பட்டுப் பயன்படுத்த முடியாத நிலையை அடையும். இதனால் இப்பிரதேசங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுகின்றது. மனிதனால் பயன்படுத்தப்படும் அதிகளவான நைதரசன் அடங்கிய இரசாயனப் பொருட்கள் மழைக்காலங்களில் சீரான வடிகாலமைப்பு இல்லாத பகுதிகளில் தேங்கும் போது அல்கா மலர்தலுக்கு உட்படுகின்றது.

 


திண்மக்கழிவு முகாமைத்துவம்


              திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் சேகரித்தல், கொண்டு செல்லல், செயன்முறைக்குட்படுத்தல், நீக்குதல் போன்ற விடயங்கள் இணைந்ததேயாகும்.

 


நிலத்தினை நிரப்புதல்: நீண்ட காலமாக உலகில் உள்ள முக்கியமான நகரங்கள் திண்மக் கழிவுகளை நிலத்தில் நிரப்பி வந்தன. இம்முறை இலகுவானதொன்றாகவும், செலவு குறைந்ததாகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது நிலங்களின் விலை அதிகரிப்பு, கப்பற் செலவு, கட்டுமானங்களின் கேள்வி, பராமரிப்புத் தேவைகள் என்பன இதனைச் செலவான முறையாக மாற்றி வருகின்றன. மற்றும் நிலத்துக்கடியில் நீர்மட்டம் உயர்வாக உள்ள பிரதேசங்களுக்கு பொருந்தாது. கழிவின் பெரும்பகுதி உயிரியலுக்குரியதும் இரசாயனத்துக்குரியதுமான செயன்முறைகளின் ஊடாகப் பிரிகையாக்கப்பட்டு திண்ம, திரவ, வாயு விளைவுகளை உற்பத்தியாக்கும்.
மீள்பாவனை: பொதுவான பார்வையில் ஒரு தடவை பாவிக்கப்பட்ட பொருள் மீண்டும் ஒரு தடவை பயன்படுத்தல் மீள்பாவனையாகக் கருதப்படும். திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் கைவிடப்பட்ட கழிவுப் பொருட்கள் மீள் செயற்பாட்டின் மூலம் பயனுள்ள ஒரு புதிய பொருளாக மாற்றும் செயற்பாடு மீள்பாவனை எனக் கொள்ளப்படுகின்றது. சில மீள்சுழற்சி செயற்பாட்டின் ஊடாக ஆரம்பத்தில் உள்ள கழிவுப் பொருட்களாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில மீள் சுழற்சிப் பாவனைச் செயற்பாட்டினால் பழைய பொருட்களைக் கொண்டு புதிய உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான பயன்பாட்டினால் சூழல் மாசடைவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உரமாக்குதல்: நிலம் நிரப்புதல் செயற்பாட்டில் ஏற்பட்ட இடப்பிரச்சினை காரணமாக பல நகரங்கள் குப்பைகளைத் தடை செய்துவிட்டன. பிரிகையடையக்கூடிய பொருட்களைப் புதைப்பதை விட உரமாக்குதல் மூலம் பயனுள்ள பொருட்களாக மாற்றமுடியும்.
கழிவுகளை ஏற்றுமதி செய்தல், கழிவிலிருந்து வலுவைப் பெறல், ஆபத்தான கழிவுகளை அப்புறப்படுத்தல் போன்றவை திண்மக்கழிவுகளை அகற்றும் மேலும் சில வழிமுறகளாகும். முறையற்ற திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் காரணமாக அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு நிகழ்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம். திண்மக் கழிவுகள் நிலம், நீர், வளி போன்றவற்றை மாசுபடுத்துவதுடன் தொற்று நோய்களையும், நீண்டகால பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. இக்கழிவுகளால் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும், அபிவிருத்தி அடந்து வரும் நாடுகளிலும் பாதிப்புக்கள் பொதுவாக உள்ளன. எனவே சூழலுக்காக தாக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எம்மால் உருவாக்கப்படும் திண்மக் கழிவுகளைக் குறைப்பதற்கோ அல்லது திறம்பட முகாமைப்படுத்தவோ நாம் முன்வர வேண்டும்.
                                                                                                                                                                                                         

ஆரபி ஜெகதீஸ்வரன்

                2017 BIO 'B'

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.