நாளாந்த வாழ்வில் இரசாயனவியல்

 

          பொதுவாழ்விலே இரசாயனம் என்பது வேண்டத்தகாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உணவில் இரசாயனம், உரங்களில் இரசாயனம் மருந்து வகைகளில் இரசாயனம் என்று இரசாயனத்தால் எல்லாம் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்று இரசாயனத்தைக் குற்றம் சுமத்துபவர்களில் நாங்களும் ஒருவர் சுருக்கமாகக் கூறினால், இந்தப் பூமியில் இரசாயனத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு.

          இரசாயனம் எப்போது ஆரம்பமானது? உலகம் எப்போது தோன்றியதோ அக்கணமே இரசாயனமும் தோன்றியது என்று விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ஒரு பெரிய மோதலொன்றின் போது வெளிப்பட்ட சக்தியானது சிறிய துணிக்கைகளால் ஆன சடப்பொருளாக மாற்றப்பட்டது. காலப்போக்கில் இச்சிறிய துணிக்கைகள் பல ஒன்று சேர்ந்து எளிய மூலகங்களும் பின் இம் மூலகங்கள் பார மூலகங்களையும் உருவாக்கின. தொடர்ந்து பல்வேறு எண்ணிக்கையிலும் பல்வேறு வழிகளிலும் சிக்கலான சேர்வைகள் உருவாகி இறுதியாக மனிதன் உருவாக்கப்பட்டான். மனிதன் இரசாயனங்களால் ஆன ஒரு மூட்டை ஆகும்.

          நீங்களும் இரசாயனத்தை வெறுத்தாலும் அதிலிருந்து தப்பவே முடியாது. எங்களை சூழவர இரசாயனம் இருக்கிறது. இரசாயனம் உங்கள் சமையலறையில் இருக்கிறது. உங்கள் சந்தைவெளிகளில் இருக்கிறது. நீங்கள் உள்ளெடுக்கின்ற மருந்து மாத்திரைகளில் இருக்கிறது. நீங்கள் அடைக்கலம் புகுகின்ற வீடுகளில் இருக்கிறது. அது எங்கும் பரந்து இருக்கிறது. எங்கள் நாளாந்த வாழ்க்கையில் இருக்கிறது.

           நாங்கள் அருந்துகின்ற நீர் ஒரு இரசாயனம் ஆகும். ஐதரசன், ஒட்சிசன் ஆகிய அணுக்கள் 2:1 எனும் விகிதத்தில் சேர்வதால் H2O எனும் இரசாயன சூத்திரத்தை உடைய நீர் உருவாகிறது. ஒரு வளர்ந்த மனிதனது உடம்பில் 2:3 பங்கு நீர்உள்ளது. மனித வாழ்விற்கு நீர் மிகவும் முக்கியமானது. உடலானது குடிநீர், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் மூலமே நீரை உள்ளெடுக்கின்றது.

        ஒவ்வொரு இரசாயனப்பொருளும் இயற்கையானதாய் இருக்கலாம் அல்லது செயற்கையானதாயிருக்கலாம். இரசாயனவியலாளர்கள் எவரும் இரசாயன பொருட்களைக் கண்டுபிடிக்கவில்லை. இயற்கை அன்றே எண்ணுக்கணக்கற்ற இரசாயனப்பொருட்களைத் தன் ஆய்வுகூடத்தில் தொகுத்து வைத்திருக்கிறாள். இலைகள், பூக்கள், தண்டுகள், வேர்கள், மிருகங்கள், எரிமலைகள், சமுத்திரங்கள், வளிமண்டலம் என்றவாறு முடிவில்லாத வகைகளும், எண்ணுக்கணக்கற்ற சிக்கலான சேர்வைகளையும் இயற்கை அன்னை தொகுத்து வைத்திருக்கிறாள். ஒரு குறித்த தாவர இலையிலுள்ள இரசாயனப் பொருட்களை ஆராய்ந்து பார்த்தால் சில ஏற்கனவே அறியப்பட்டவையாக இருக்கும்.

              சில புதிதாகவும், கேள்விப்பட்டதாகவும் இருக்கும். இரசாயனவியலாளனை இயற்கை பலவழிகளிலும் குழப்பியும் இருக்கிறது. எவ்வாறெனில் குறித்த ஒரு தாவரத்தின் இலையிலுள்ள இரசாயனப்பொருட்களின் விகிதமானது மண், பருவகாலங்கள் போன்றவற்றின் மாற்றத்தால் வேறுபட்டதாய் இருக்கின்றது. Instant Soup, Sauce, Packed Foods போன்றவற்றில் சேர்க்கப்படும் Food Flavours  செயற்கை இரசாயனப் பொருட்கள் ஆகும். ஆனால் சில உற்பத்தியாளர்கள் இவ் இரசாயனப் பொருட்கள் போன்ற மாதிரிகளைப் பிரதியீடுகளாகச் சேர்ப்பதால் அவை வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

              இரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்களை மக்கள் தெரிவு செய்யும்போது ஒரு இரசாயனவியலாளனால் சரியான தகவல்களை வழங்கமுடியும். இயற்கை வளங்களை மீளப்பயன்படுத்தி சூழலைப் பாதுகாக்க இரசாயனவியலாளனால் உதவ முடியும். சூழலையும் மனிதனையும் மாசுபடுத்தாதவாறு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த இரசாயனவியலாளனால் முடியும். போக்குவரத்தின் போது சக்திவளங்கள் விரயமாவதைத் தடுக்கவும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இரசாயனவியலாளனால் முடியும். கைத்தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை, வாயுக்கசிவுகளுக்கான காரணங்களைக் கண்டறிய இரசாயனவியலாளனால் முடியும். எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற சக்தி நெருக்கடிகளைச் சமாளிக்க இரசாயனவியலாளனால் முடியும்.

“விஞ்ஞானத்தின் மையத்தில்

இருப்பது இரசாயனமே ஆகும்”

Prof.J.P.Jeyadevan

Dean Science

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.