ஆய்வுகூடத்தில் அசம்பாவிதம்

 

          நீதிமன்றம். எங்கும் அமைதி நிலவியது. “நீதிபதி வருகிறார்.” ஓர் குரல் ஊடுருவி அமைதியைக் குலைத்தது. பார்வையாளர்களிடையே சலசலப்பு. எல்லோரும் எழுந்து நீதவானிற்கு மரியாதை செலுத்தி அமர்ந்தனர்.

 

            விசாரணை ஆரம்பித்தது. வழக்கின் முதல் சாட்சியாக பொலிஸ் அதிகாரி அழைக்கப்பட்டு சம்பவ தினத்தில் நடந்தது பற்றி நீதிபதி வினவினார். பொலிஸ் அதிகாரி கூண்டிற்குள் வந்து தனது சாட்சியத்தை கூறத் தொடங்கினார். “11.10.2017 அன்று காலை 9.30 மணியளவில் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை இரசாயனவியல் ஆய்வுகூடத்தில் தீ விபத்து என தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அங்கு இருவர் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பெயர் Na(சோடியம்), K(பொட்டாசியம்) எனவும் அவர்கள் ஆவர்த்தன அட்டவணை என்ற கிராமத்திலுள்ள முறையே 2ஆம் ஆவர்த்தன வீதியிலுள்ள II ஆம் கூட்ட இலக்க எண்ணுடைய வீட்டையும், 3ஆம் ஆவர்த்தன வீதியிலுள்ள II ஆம் கூட்ட இலக்க எண்ணுடைய வீட்டையும் சேர்ந்தவர்களென பாடசாலை சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் ஆய்வுகூட மண்ணெண்ணெய் காப்பகத்தில் வசித்ததாக தெரிய வந்தது. மேலும் சிலர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஸ்தலத்திலிருந்து Ag(வெள்ளி), Cu(செப்பு) ஆகியோர் எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டனர்.” தனது சாட்சியத்தை கூறி முடித்த பொலிஸார் தன் இருப்பிடத்தில் அமர்ந்தார்.

 

         அடுத்த சாட்சியாக போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அழைக்கப்பட்டார். “சம்பவ தினத்தன்று அதே கிராம 3ஆம் ஆவர்த்தன வீதியிலுள்ள II ஆம் கூட்ட இலக்க எண்ணுடைய வீட்டை சேர்ந்த Mg(மக்னீசியம்) ம், 4ஆம் ஆவர்த்தன வீதியிலுள்ள II ஆம் கூட்ட இலக்க எண்ணுடைய வீட்டை சேர்ந்த Ca(கல்சியம்) ம் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு தற்சமயம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் Al(அலுமினியம்), Zn(நாகம்), Fe(இரும்பு) போன்றோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். Sn(வெள்ளீயம்), Pb(ஈயம்) ஆகியோர் சிறுகாயங்களுடன் தப்பினர். தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள Mg, Ca ஆகியோரில் MgCl2, CaCl2 என்பன காணப்பட்டன. பிரேத பரிசோதனை மேற்கொண்ட சடலங்களில் NaCl, KCl என்பனவே காணப்பட்டன.” என வைத்திய அதிகாரி கூறினார்.

 

        மீண்டும் பொலிஸ் அதிகாரி சாட்சியங் கூற அழைக்கப்பட்டார். “சட்ட வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சூத்திரதாரியின் உடலில் Cl(குளோரின்) இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தோம். சம்பவம் நடந்த போது ஸ்தலத்தில் எதுவித பாதிப்புக்கும் உள்ளாகாத Cu, Ag போன்றோரிடம் விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் சூத்திரதாரியின் அங்க அடையாளங்களாக திரவத் தன்மை, உடலிலிருந்து வெண்புகை வெளியேறியமை ஆகியவற்றைக் குறிப்பிட்டனர். இவற்றின் அடிப்படையில் தாக்குதலின் சூத்திரதாரி HCl என கண்டறிந்தோம். இவ்வாறு பொலிசார் கூறினார்.

 

           அடுத்ததாக பிரதான சந்தேக நபரான HCl சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். நீதிபதி HCl இடம் “உம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நீர் ஒப்புக்கொள்கிறீரா?” என வினவினார். அதை மறுத்தவாறு HCl “என்னால் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ள முடியாது. இதைச் செய்தவன் நானாயினும் இதற்கு தூண்டுதலாயிருந்தது அப்பாடசாலையில் உயர்தர இரசாயனவியல் பயிலும் மாணவி தான். இவ்விபத்திற்கு முற்றிலும் காரணமானவர் அம்மாணவியே தான்.” என்றது.

 

          இதைக்கேட்ட நீதவான் அடுத்த சந்தேக நபரான அவ்விரசாயனவியல் மாணவியை அழைத்தார். அம்மாணவி தன் தவறை உணர்ந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இரசாயனவியலில் தன் அறிவை மேம்படுத்தவே ஆராய்ச்சி நோக்குடன் இச்செயல் புரிந்ததாக கூறினார்.
              இவ்வனைத்து சாட்சியங்களின் சாட்சியின் அடிப்படையில் நீதவான் தன் இறுதி தீர்ப்பை வாசித்தார். “இவ்வழக்கின் தடயங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் HCl, மாணவியினது குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாம் சந்தேக நபரான HCl ஆல் இவ்வாறான விபத்துக்கள் இனிவரும் காலங்களிலும் நிகழலாம் என்பதால் அவர் ஆய்வுகூட களஞ்சியசாலையில் தகுந்த பாதுகாப்புடன் தனி அறையில் சிறை வைக்கப்பட வேண்டும். இவர் களஞ்சியசாலைக்கு வெளியே வரவேண்டுமாயின் H2O(நீர்) எனும் காவலாளியுடனேயே வரவேண்டும் என தீர்ப்பளிக்கிறேன். அடுத்ததாக இரண்டாவது சந்தேக நபரும் பிரதான குற்றவாளியுமான மாணவி இறந்தவர்களை பிரதியீடு செய்வதற்கான பணத்தை குற்றப்பணமாக பாடசாலைக்கு செலுத்த வேண்டும் எனவும், கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் A சித்தி பெறும் வரை பாடசாலைக் கல்வியைத் தொடர வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கிறேன்.” என நீதவான் தீர்ப்பளித்தார். பாடசாலை ஆய்வுகூடங்களில் ஆசிரியர்கள் கண்காணிப்பின் கீழ் மாணவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, இரசாயன பதார்த்தங்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

மயூரி திருஞானச்செல்வன்

13A Bio (2017)

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.