விஞ்ஞானத்தின் ஓர் பாகமாய் இந்து மதம்

 

        

        இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி உச்ச கட்டத்திலிருப்பதாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் விஞ்ஞானம் சந்தித்திருக்கும் வீழ்ச்சியை எவரும் உணர்ந்தவாறு தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாக இந்தப் பூமியில் நிலைத்துநின்ற விஞ்ஞானம் இன்று இங்கு இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அக்காலங்களில் வாழ்ந்த நமது மூதாதையர்கள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதபடியாக, ஆராய்ந்து அறிந்து தமது கண்டுபிடிப்புக்களில் நிதானமாக ஈடுபட்டமை தான் நமது பூமி இதுவரை காலமும் அழியாமல் இருக்கக் காரணம். அன்றைய கிரேக்கர்களும், உரோமர்களும், மாயன்களும், இந்து மக்களும் தத்தமது வழிகளில் சூழல் நேயத்துடன் வளர்த்த அந்த விஞ்ஞானம் இக்கால விஞ்ஞானத்தைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்தது.
         இவற்றுள் ஒன்றான இந்துக்களின் விஞ்ஞான நடவடிக்கைகளை நோக்கினோமாயின், இவை இக்காலமக்களினால் மூடநம்பிக்கைகள் என்ற பெயரில் தூக்கியெறியப்பட்ட அக்காலத்தினது பொக்கிசங்கள் என்பதே உண்மை. அன்று மக்களை நல்வழியினில் நடக்க வைப்பதற்காக அக்கால அறிஞர்களால் சற்றே மெருகூட்டப்பட்டு கூறப்பட்டிருப்பினும், அவற்றினுள் பொதிந்திருக்கும் உண்மைகள் ஆத்மார்த்தமானவை. அவற்றை புரிந்துகொள்வதில் நாம் தான் காலந்தாழ்த்திவிட்டோம். இன்று நம் பூமியை மறுபடியும் பழையபடி மாற்றவென்று, மூடநம்பிக்கைகள் என முத்திரை குற்றித் தள்ளி வைத்தவற்றை மீளவும் ஆய்வு செய்யத் தொடங்கியது தான் நாம் செய்த ஒரேயொரு நல்ல விடயம்.
          தற்போது நாம் பயன்படுத்தும் இரசாயனக் கிருமிகொல்லிகளை விட அக்கால மஞ்சள்நீர், சாணநீர், வேப்பிலையின் சாறு எனப் பலவும் சிறந்த கிருமிகொல்லிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் மரணச்சடங்கின் போது பறையடித்தலானது இறந்த உடலிலிருந்து வெளியேறும் கிருமிகள் எவருடைய உடலிலும் புகுந்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடாதெனும் நோக்கிலேயே இடம்பெறுகின்றது. பறையொலியின் அதிர்வு காரணமாக கிருமிகள் சற்று மயக்க நிலையை அடைகின்றன. பூதவுடலானது சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் அவ்விடம் கழுவப்பட்டு மஞ்சள் நீரால் கிருமிநீக்கம் செய்யப்படுகின்றது. தற்போது நாம் பயன்படுத்தும் இரசாயன மருந்துகள் நமக்கு உடனடித்தீர்வை நல்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் அதிகம். ஆனால் அக்காலத்து மூலிகை மருத்துவத்தின் மூலம், நோய்களைக் குணப்படுத்த நீண்ட காலம் எடுத்தாலும், எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி முழுமையாக குணமடைய முடியும்.
    இந்துக்களின் ஆலய அமைப்பை நோக்கினோமாயின், ஒரு மனிதன் படுத்திருப்பது போன்றதொரு கட்டமைப்பாகவே இது காணப்படுகின்றது. ஆலயத்தில் இடம்பெறும் ஆராதனை, அபிசேகங்கள் மூலமாகவும், மந்திர உச்சாடனங்கள் மூலமாகவும் அண்டத்திலிருந்து பெறப்படும் நேர்சக்தியானது, ஆலய கலசத்தினால் உறிஞ்சப்பட்டு ஆலய விக்கிரஹங்களை சென்றடையும் படியாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதே. இந்த நேர்சக்தியானது நமது தேகத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதனூடாக நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றது. இந்த நேர்சக்தியை உறிஞ்சியெடுப்பதற்கென்றே ஆண்கள் ஆலயத்தினுள் மேற்சட்டை அணியக் கூடாதென்றனர் அக்கால அறிஞர்கள். இதனை பெண்களுக்கும் செயற்படுத்துவதென்பது நடைமுறைக்குப் பொருந்தாதது. ஆனபடியால் தங்கத்தினது நேர்சக்தியை உறிஞ்சும் இயல்பு காரணமாக பெண்கள் தங்க நகைகளை அணிந்தபடி ஆலயம் செல்கின்றனர். இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
      அனைத்தையும் விட முக்கியமான விடயம் யாதெனின், இந்து சமயத்திலுள்ள மர்மங்கள் தான். இந்துக் கடவுளர் ஒவ்வொருவரும் விசித்திரமான உருவங்களில், வௌ;வேறு திறமைகளையுடைய நபர்களாகக் காணப்படுகின்றமையென்பது அனைவரையும் ஆச்சரியப்படச் செய்யும் ஒரு விடயம். இது தொடர்பிலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றையும் கூறலாம் என்று எண்ணுகின்றேன்.
       இந்து சமயத்தில் கடவுள் பற்றி வரைவிலக்கணப்படுத்தும்போது, கடவுள் ஆதியும்(தொடக்கம்), அந்தமும்(முடிவு) அற்றவர்; எங்கும் உள்ளவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர் என்றபடியாக அடுக்கிக்கொண்டு செல்கின்றனர். கடவுள் என்றால் இப்படியெல்லாம் இருப்பாரா? என்று வியப்படைவதை விடுத்து, எதற்காக இவ்வாறு கூறினார்கள் என்பதை சற்றே சிந்தித்தோமாயின், உண்மை புலப்படுவது திண்ணம். இதை அக்காலமக்கள் இயற்கையைப்போற்றி வழிபட்டமைக்கான ஆதாரங்கள் பலவும் கிடைத்துள்ளமையுடன் தொடர்புபடுத்திப்பார்க்கும் போது, இவர்கள் கடவுள்களாக வழிபட்டது “சக்தி”(Energy) யாக இருக்குமோ என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது. இவர்கள் சக்தியின் பல்வேறு வடிவங்களையும் ஒன்றிணைத்து, அப்படியான சேர்வைகள் ஒவ்வொன்றையும் தனித்தனிக் கடவுளர்களாக வணங்கியிருக்கலாம். அண்டத்திலிருக்கும் சக்தியானது ஆக்கவோ, அழிக்கவோ முடியாதது. இதை வௌ;வேறு வடிவங்களுக்கு வேண்டுமானால் மாற்றிப் பயன்படுத்த முடியும். ஆகவே ஒருவேளை வேறேதேனும் ஒருவகைச் சக்தியானது தன் வடிவத்தை திணிவுச் சக்தியாக(Mass Energy) மாற்றி வந்திருக்கலாம். இன்னமும் சில நம்மால் உணரமுடியாத சக்திகள் இந்த அண்டத்தில் உள்ளன என தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே இதற்கும் ஓரளவு சாத்தியம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். மேலும் கூடுதலாக அனைவரும் சிவலிங்கத்தினை நேரில் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். அவ்வடிவம் வேற்றுக்கிரகவாசிகளின் விண்வெளிஓடம் (Alien Space Ship) போன்ற வடிவத்தை ஒத்தது என்றால் எவராவது ஏற்றுக்கொள்வீர்களா? எதற்கும் ஒருமுறை உற்றுப்பாருங்கள்.

          இதிலிருந்து, ஒருவேளை அக்காலமக்களின் கடவுளர் வேற்றுக்கிரகவாசிகளின் விண்வெளி ஓடம் போன்ற எதையேனும் பயன்படுத்தி யிருக்க வேண்டும் அல்லது நாம் வேற்றுக்கிரகவாசிகளின் விண்வெளி ஓடம் எனக் கருதுவது இந்துக்கடவுளரின் வாகனமாகவும் இருக்கலாம். சிவலிங்கத்தில் வரும் “லிங்கம்” என்ற சொல்லில் “லிங்” என்பது அண்டசராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் எனவும், “கம்” என்பது ஒடுங்கிய அனைத்தும் மீளவும் தோன்றுமிடம் எனவும் பொருள் கொள்ளப்படும். ஆகவே ஒருவேளை சிவலிங்கம் தான் அண்டத்திலுள்ள அனைத்துக்கும் உரிய சக்தியை வழங்கிவரும் சக்தி முதலாகவும் இருக்கலாம்.
          இந்துக்களால் கடவுள் என்று அழைக்கப்படும் சக்தியானது விரும்பும் நேரத்தில் விரும்பிய இடங்களுக்கு செல்லக்கூடியதாக உள்ளதோடு, ஒரேவேளையில் பல இடங்களுக்கும் செல்லக்கூடியதாக உள்ளது. இதிலிருந்து இச்சக்தி ஒருவேளை காலத்தைக் கடந்து பயணிக்கக் கூடியதாகவும் இருக்குமோ என்றதோர் ஐயப்பாடு தோன்றுவது இயற்கையே. ஐன்ஸ்டீனின் கருத்தின் பிரகாரம் (E=mc2) திணிவற்றவை மட்டுமே ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். கடவுள் என்பது ஒரு சக்தியாக இருக்கலாம் என்ற எனது கூற்றின் பிரகாரம், காலத்தைக் கடந்து பயணிக்கக்கூடிய தன்மை “கடவுள்” என்ற மாபெரும் சக்திக்கு இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகவுள்ளது.

          மேலும் “கடவுள் நாம் வேண்டுவதையெல்லாம் நமக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்தால் நிறைவேற்றுவார்” என்ற ஐதீகம் பற்றி நோக்குவோமாயின், நமது மூளை நினைக்கும் விடயங்கள் அனைத்துமே நமக்கு ஏதேனும் ஒரு விடயத்தில் உள்ள உறுதியான நம்பிக்கை காரணமாக எழுந்ததாக இருப்பின், அதன் மீடிறன் அதிகரிப்பதனால் அண்டத்தில் காணப்படும் கற்பனை வடிவிலமைந்த ஒரு தற்காலிகமான நினைவகத்தை (An Imaginary Universal Subconscious Memory) அடைந்து உருப்பெற்று மீளவும் நம்மை வந்தடையும். இதனால் தான் அக்காலமக்கள் கூட்டாக இணைந்து பிரார்த்தனை செய்வதன் மூலமாக வலுப்பெற்றதொரு அலையை உருவாக்கி தாம் எண்ணிய பல நன்மையளிக்கும் செயல்களிலும் வெற்றிபெற்றனர். மாறாக, நமது மூளை நினைக்கும் விடயங்கள் உறுதியான நம்பிக்கையின்றியதாகக் காணப்படின், அந்தச்சந்தர்ப்பத்தில் உருவாகும் அலையின் மீடிறன் போதாமல் இருக்கவே அந்த அலையானது பாதியிலேயே நின்று விடுகின்றது. இவ்வாறே ஏராளமான நம் அறிவுக்கு இதுவரையில் எட்டாத பல விடயங்களும் இன்னமும் உள்ளன. அவற்றை மூடநம்பிக்கைகள் என்று விட்டுவிடாது ஏன் அவ்வாறு என்று நம்மை நாமே வினவினால் பல உண்மைகளும் வெளிப்படும் என்பது திண்ணம்.

Pirarththana Balabavan.

12 Bio”E” (A/L 2019).

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.