விஞ்ஞானத்தின் கலங்கரை சேர்.அல்பர்ட் ஐன்ஸ்டைன்


        இந்த உலகத்திலே எதுவும் நிலையில்லை என்ற இந்து மதத்தின் பழைய கோட்பாட்டை உண்மை என நிருபித்தவர் விஞ்ஞானிகளுக்கெ ல்லாம் விஞ்ஞானி சேர்.அல்பர்ட் ஐன்ஸ்டைன். கோட்பாட்டு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன் கணித திறமைகள் கொண்ட ஒரு இயற்பியல் அறிஞர் ஆவார். 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராக பொதுவாக கருதப்படுகிறார். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி ஜேர்மனியிலே பிறந்தார். சிறுவயதிலிருந்து வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதை காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்திப்பார். அந்த வயதிலேயே இவர் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவற்றின் மீது அவருக்கு ஆர்வமும் பகுத்தறியக்கூடிய திறனும் இயற்கையாகவே காணப்பட்டது.


       ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புக்களும், சிந்தனைகளும் விஞ்ஞானத்தை புரட்டிப்போட்டது எனக் கூறமுடியும். அத்துடன் இவரது சிந்தனைகளும் கோட்பாடுகளும் நவீன விஞ்ஞானத்திற்கு வித்திட்டது. ஐன்ஸ்டைனின் E=mc2 எனும் சமன்பாடு விஞ்ஞானிகளின் புனிதச்சின்னமாக மாறிப்போனது. அதாவது திணிவுக்கும், ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர் உருவாக்கிய இச்சமன்பாடு தான் இதுவரை உலகிலேயே மிகச் சிறந்த சமன்பாடாக கருதப்படுகிறது. மற்றும் சார்பியல் கோட்பாடு என்ற இறவாத கோட்பாட்டை உலகிற்கு அளித்த பெருமையும் இவரையே சாரும். நியுட்டனின் கண்டுபிடிப்புக்கள் பைபிளின் பழைய ஏற்பாடு என்று வைத்துக் கொண்டால் ஜன்;ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பைபிளின் புதிய ஏற்பாடு எனக்கூறலாம். மிகப்பெரிய சக்தியை கூட மிகச் சிறிய எடையுள்ள ஒரு அணுவில் உண்டாக்க முடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் அணுகுண்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் ஐன்ஸ்டைன் ஒரு அமைதி விரும்பி யுத்தத்தை வெறுத்தார்.
       

       இவற்றை தவிர இலத்திரகளின் செயற்பாட்டை விளக்கும் photo electric effect, அணுக்களின் துணைத்துகள்களின் செயற்பாட்டை விளக்கும் என உலகம் அதுவரை கேள்விப்படாத விடயங்களைச் சொன்னவர் இவர். மேலும் போட்டோன்கள், ஒளியின் வேகம், பிரபஞ்சத்தின் இயக்கம் என எல்லா வகையான நவீன இயற்பியல் ஆராய்ச்சிகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஐன்ஸ்டைன். ஐன்ஸ்டைன் தனது சிந்தனைகளை பிரதானமாக நான்கு கட்டுரைகள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவை ஒளிமின் விளைவு, பிரௌனியன் இயக்கம், சிறப்புச்சார்புக் கோட்பாடு, திணிவு-ஆற்றல் சமன்மை விதி என்பனவாகும். ஐன்ஸ்டைனின் ஒளிமின் விளைவு தொடர்பான ‘ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்’ என்கின்ற ஆய்வுக் கட்டுரையானது போட்டோன்கள் என்ற கருதுகோளை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தலாம் எனவும் விவரித்தது.
     

     1905ல் வெளிவந்த பிரௌனியன் இயக்கம் தொடர்பான கட்டுரையான ‘நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்று கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்’ என்பது திரவ இயக்கவியலை பாவித்து அவதானிக்கப்பட்ட பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாக கொள்ளலாம் என நிறுவியது. ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான ‘இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்’ என்பது சிறப்பு சார்புக் கோட்பாடு பற்றி விளக்கியது. அதாவது இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான விஷேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மேக்ஸ்வெலின் மின்காந்தவியலுடன் பொருந்துவதாயும், புவியீர்ப்பு விசையை தவிர்ப்பதாயும் இருந்தது.
       

    இவ்வாறு ஐன்ஸ்டைனின் சிந்தனைகள் உலகிற்கு வந்தன. மேலும் ஐன்ஸ்டைனின் இக்கருத்துக்கள் பிரபல்யம் வாய்ந்ததாகவும், அநேக சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு விடையளிப்பதாகவும் இருந்ததால் விஞ்ஞானத்தின் உன்னத வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்தன. எனவே இவரை இவ்வுலகம் சிறந்த சிந்தனையாளராகவும், தலைசிறந்த இயற்பியலாளராகவும் ஏற்றுக்கொண்டது. 1921ஆம் ஆண்டு இவருக்க இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. அத்துடன் 1999 இல் புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழில் ‘இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்’ என்ற பெயர் ஐன்ஸ்டைனுக்கு வழங்கப்பட்டது.
         

     தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக் கூர்மையுள்ள ஒருவரை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. இவ்வாறு தனது அளப் பெரிய சேவையின் மூலம் உன்னத நிலையை அடைந்தவர்களில் விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்டைனுக்கு தனி இடம் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் அதன் நவீன பரிமாணத்திற்கும் வித்திட்ட விஞ்ஞானி சேர்.அல்பேர்ட் ஐன்ஸ்டைன் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் திகதி அமெரிக்காவில் தனது 76 வயதில் இறந்தார். ஆனால் அவரது சிந்தனைகளுக்கும் இயற்பியல் கோட்பாடுகளுக்கும் ஏது சாவு? காலம் உள்ளவரை அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் போற்றப்படும்.

A.Suventhira

2018 Bio “D”

 

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.