சூழலோடு சூழ்வோம்

                                                                                            சூழலோடு சூழ்வோம்
'புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதத்தின் நுட்பங்கள் யாவும் மெத்த வளருது மேற்கே. அந்த மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை' என்று பாரதி பாடியதன் தூண்டலினால் மேற்கோடு சேர்ந்து நாமும் இயற்கையை அழிக்க ஆரம்பித்து விட்டோம.;
மனிதகுலம் எதிர் நோக்குகின்ற சவால்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் என்பவற்றைத் தீர்ப்பதற்காகவும் மக்களின் தேவையையும், விருப்பையும் நிறைவு செய்வதற்காகவும் விஞ்ஞானமானது யுகம் யுகமாக விருத்தி செய்யப்பட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் சாத்தியமற்றன எனக் கருதப்பட்ட பல நேற்றைய கற்பனைகள் சாத்தியமாகின. மனிதனின் நீடித்து நிலைத்த வாழ்விற்கு விஞ்ஞானத்தின் பங்கு அபரிமிதமானது. எனினும்
''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண்''
தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம், பழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம். இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை. மலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக்கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. மனித இனம், தம் சுற்றம் குற்றமற்று வாழ, சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.
;. இதற்கெனவே தான் சுற்றுச்சூழல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. அரசியல் கவனத்தையும், செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும், உலகச் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும், சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.
1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 'மனித குடியிருப்பும், சுற்றாடலும்' என்ற வரலாற்றுப் புகழ் மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்பாடு போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டது.
இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும். மனித இனமற்றும் உயிரங்கிகளின் நிலவுகைக்கு ; இந்த சுற்றுச் சூழலிலின் சமநிலை மிக அவசியமானதாகும். இச்சுற்றுச்சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுசூ10ழலை மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன. நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் இன்று மாசடைந்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.
இவ்விஞ்ஞானத் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியால் சுருங்கி விட்ட உலகம், எளிதாகிவிட்ட விண்வெளிப்பயணங்கள், மனித வாழ்வை இலகுவாக்கி விட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், முறியடிக்கப்பட்ட மனித வாழ்விற்கான சவால்கள், எல்லைகளற்ற பரந்த சிந்தனை என விஞ்ஞானத்தின் ஒரு முகமும் சூ10ழல் மாசடைதல், பேரழிவு ஆயுதங்கள், அதிகரித்துவிட்ட நோய் நிலைமைகள், மனித மனங்களில் ஏற்பட்டிருக்கின்ற பிறழ்வுகள் என விஞ்ஞானத்தின் மறுமுகமும் விஞ்ஞானத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது நிழலாடுகின்றது. ஆக மொத்தத்தில் இன்றைய விஞ்ஞானம் சாதித்துவிட்ட சாதனைகளும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சவால்களும் ஒரு சமாந்தரமான வளர்ச்சிப் போக்கை காட்டுகின்றன
இன்றைய விஞ்ஞானம் ஏற்படுத்துகின்ற சவால்களே நாளைய எதிர்காலச் சந்ததி எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாகவும் மாறக்கூடும். ஒருபுறம் மனித வாழ்வை இலகுவாக்கி குறுகிய கால நன்மைகளை கொடுக்கின்ற விஞ்ஞானம் மறுபுறம் நாளைய எதிர்கால தூரநோக்கிலான சவால்களை அள்ளி வழங்குகின்றது.
எனவே 'இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான்' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ். குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள் தான் மனிதராக மாறும் போது அவை மரமாக வளர்ந்து நிற்கும். இதைப் பாடசாலைகள் செயல்படுத்த வேண்டும். பாடசாலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுசசூ10ழல் மன்றம், தேசிய சுற்றாடற்கழகம் மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இனிப்பு வகைகளின் பரிமாற்றத்திற்கு பதிலாக, மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல், ஒவ்வொரு விழாக்களிலும் ஒரு மரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல், உலக சுற்றுச் சூழல் தினம், உலக வனநாள் போன்ற தினங்களைப் பாடசாலை மூலமாக விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல், இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல், ஊடாக இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக் கூறி மாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பாடசாலைகள் செய்ய வேண்டும்.
; 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான மூலமாகும். இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனி மனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல, புல் பூண்டுகளும் ஓர் அங்கம் தான் என்பதை உணர வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்றளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும்.
பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம். மரங்கள் நிறையும் போது, நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
இயற்கையை நேசிப்போம்! இயன்றதை யாசிப்போம்!

 

Mr. N.Janaarththan

Teacher

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.