இனி ஒரு விதி செய்வோம்!

 

               நாம் 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதற்காக எம்மால் பெருமைப்பட முடியுமா? இல்லை, மனிதர்களாகிய நாம் தான் பசுமையாக இருந்த புல்வெளிகளை பாலைவன மாக்கினோம். இந்தப் பூமித்தாய் நாம் பிறக்கும் போது பல நறுமணமுள்ள மலர்களை வழங்கும் மரங்களை எமக்கு பரிசளித்தாள், நம் பசி பட்டினி போக்க நல் உணவை வழங்கும் விருட்சங்களை பரிசளித்தாள், நாம் நிம்மதியாக உறங்க நிழலை பரிசளித்தாள். இவ்வாறு அத்தியாவசியமான உடை, உணவு, உறையுள் தந்த பூமித்தாய்க்கு நாம் செய்த நன்றி தான் என்ன? இந்த உலகிலுள்ள மரங்கள் அனைத்தையும் நம் பேராசையால் அழித்தோம். தற்சமயம் பூமியே காடாக இருந்த இடத்தில் காடுகளை பாதுகாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டோம்.

            ஒரு விதை விழுந்து விருட்சமாகும் போது அதன் அருகே நறுமணம் கொண்ட பூக்களை அந்த மரம் வழங்குகின்றது. அதாவது அந்த மரம் வளர, நல் வருங்காலத்தை ஏற்படுத்த வித்திடுகின்றது. ஆனால் நமது வருங்கால சந்ததியின் சுகமான வாழ்விற்கு நாம் எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்? சிந்தியுங்கள்! நாம் பணமில்லாத போது பணத்தை தேடி ஓடுகின்றோம். அதுவே அளவுக்கு மீறி பணம் உள்ளபோது அதை எவ்வாறு செலவு செய்வது என எண்ணுகின்றோம். அது போலத்தான் பூமியை எங்களுக்கு அளித்த அவள், எவ்வாறு பூமியை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட மறந்து விட்டாள். அதனால் தான் அவ் அளவற்ற வளத்தை எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

           மரங்கள் அழிக்கப்பட்டன! மனிதனின் ஒவ்வொரு அங்கமும் கொய்யும் போது ஏற்பட்ட வலியை பூமித்தாய் அனுபவித்திருப்பாள். அதனால் தானா சீற்றம் கொண்டாய்! அது மட்டுமல்லாமல் மரம் அழிக்கப்பட்டதால் பூகோளம் வெப்பமாதலைக் தொடர்ந்து திடீர் காலநிலை மாற்றம் இவ்வாறன தொடர்ச்சியான பிரச்சனைக்கு மனிதன் காரணமாகி விட்டான்.

            வெர்மாண்டில் உள்ள ரட்லண்ட் மாகாணத்தின் விவசாய சங்கத்தினர் முன் 1847 sep 30 அன்று பேசிய உரையில் ஜார்ஜ் பெர்க்கின்ஸ் மார் என்பவர் சொன்னார், “மனிதன் தனது மகிழ்ச்சிக்கேற்ப மழையையும், வெய்யிலையும், காற்றையும், பனிப்பொழிவையும், பனியையும் வருவிக்க கட்டளை இட முடியாது' என்றாலும் மனிதனின் செயற்பாடுகளுக்கு ஏற்ப இயற்கை தானாகவே நல்ல முறையிலோ தீய முறையிலோ மாற்றம் பெற்று வருகின்றது. இந்த மார் ஒரு விவசாயி என்பது குறிப்பிடத் தக்கது. பசுமை என்பது எவர் கையிலும் இல்லை என கையை விரித்து விட்டால் யார் கையில் உள்ளது? மனிதன் இனியாவது உணர வேண்டும் அது எல்லோர் கையிலும் உள்ளது. எமக்கு 21ம் நூற்றாண்டு வேண்டாம் 1ம் நூற்றாண்டுக்கே திரும்பி விடலாம் வாருங்கள் மீண்டும் ஒரு பசுமைப் புரட்சிக்கு.......!


த.அபிவர்ணா

2017 Maths 13c

Copyright © 2017 Science Union, Vembadi Girls' High School. All Rights Reserved.